Saturday 21 June 2014

சமய நூல்கள்

4.4 சமய நூல்கள்
சமய நூல்கள் தனிச்சிறப்புடையவை. அவற்றை மொழிபெயர்ப்பது அரிய செயல். அதைப்பற்றிப் பார்க்கலாம்.
4.4.1 பைபிள் மொழிபெயர்ப்பு
அமேசான் ஆற்றோரத்தில் ஒருவன் காணுகின்ற கனவுகள் காவிரிக்கரையோரத்தில் இருக்கும் ஒருவனுக்கும் புலனாகும் வண்ணம் மாற்றப்படும் சிந்தனையே மொழிபெயர்ப்பு என்பதை நாம் உணரலாம். இந்நிலையில் கீழை நாகரிகத் தொட்டிலில் தோன்றிய பல சமயங்கள் குறிப்பாகச் சைவ, வைணவ, சமண, பௌத்த சமயச் சாரங்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளையும் எட்டியுள்ளதென்றால் சமய வழிபாட்டு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும் மொழிபெயர்ப்பு இதில் பேரிடம் வகிக்கிறது. ஆசியா கண்டம்தான் சமயத் தோற்றச் சிறப்பிடம் என்பது உலகேற்கும் உண்மை. பொருளை உணர்த்துகின்ற நிலை நோக்கமாக அமையும் பொழுது மொழிபெயர்ப்பானது மொழிகளின் வேற்றுமைகளை மறைத்து விடுகிறது. இந்த உண்மை சமயநூல் மொழிபெயர்ப்பில் நூற்றுக்கு நூறு பொருந்தும். இந்நிலையில் கீழை ஆசியநாட்டில் தோன்றிய கிறித்தவ சமய நூலான பைபிள் என்னும் விவிலியம் மொழிபெயர்ப்பில் முன்னிடம் பெறுகிறது. பலநூறு மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ள விவிலியம் பக்தியின் மொழியான தமிழில் 1714 இல் முதல் தோற்றம் கண்டது. தமிழில் வெளிவந்த முதல் மூன்று மொழிபெயர்ப்புக்களையும் ஜெர்மானியர்கள் செய்தனர் என்று அறிகிறோம்.

• முதல் மொழிபெயர்ப்பு
இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது என்பது சிறப்புக்குரிய ஒரு செய்தியாகும். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்கு என்பவரால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜான் பிலிப் பெப்ரீசியஸ் என்பவராலும் பின்னர் இரேனியஸ் என்பவராலும் (1833 இல்) மொழிபெயர்க்கப்பட்டன. இதற்குப் பின்னர் அமெரிக்கரான பீட்டர் பெர்சிவல் இலங்கை, இந்தியா என்ற இரு இடங்களிலும் (யாழ்ப்பாணம், சென்னை) இருந்து 1848 இல் பணியை நிறைவு செய்தார். பிரஞ்சு தந்தைக்கும் இந்தியத்தாய்க்கும் தோன்றிய பவர் ஐயர் 1871 இல் முழு வேதாகமத்தையும் மொழிபெயர்த்தார். தொடர்ந்து லார்சன் 1936 இலும் மோனகன் 1954 இலும் மொழி பெயர்த்தனர்.
• தமிழரின் மொழிபெயர்ப்பு
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட டி. இராஜரீகம் என்பவர் அவருக்கு முன்னர் வந்த பைபிள் மொழி பெயர்ப்புகளில் காணப்படும் புரியாத சொற்களை நீக்கி, தூய தமிழாக்கிய பெருமை பெற்றார். திருத்த முறைக் கிறித்தவ மொழிநடை, கத்தோலிக்கக் கிறித்தவ மொழிநடை என்ற பாகுபாட்டுக்குள் கிடந்த பைபிள் மொழிபெயர்ப்பு பொது மொழிபெயர்ப்பு என்ற நிலையில் ஒருங்கிணைந்த ஒரு குழுவினரால் செய்யப்பட்டுத் திருத்தம் பெற்றது. இன்னும் இப்பணி தொடர்ந்து கொண்டு வருகிறது.
4.4.2 காப்பிய மொழிபெயர்ப்பும் புராண மொழிபெயர்ப்பும்
இராமாயண மொழிபெயர்ப்புகள் பல எழுந்துள்ளன எனினும் அது இலக்கிய மொழிபெயர்ப்பு என்ற நிலையில் கூறப்பட இருப்பதால், இப்போது இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத மொழிபெயர்ப்பு இங்கே கருதப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் இராமாயணக் கதைகளைவிட மகாபாரதக் கதைக் குறிப்புகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. அதிகக் கிளைக் கதைகளைக் கொண்டு வடமொழியில் இயற்றப்பட்ட மகாபாரதக் கதை தமிழில் மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் என்ற சின்னமனூர்ச் செப்பேட்டுச் சொல்லால் கடைச் சங்க இலக்கிய காலத்துக்கு முன்னரே மொழிபெயர்க்கப்பட்ட நிலையை அறிகிறோம். பின்னர் மூன்றாவது நந்திவர்மன் காலத்தில் பெருந்தேவனார் என்னும் புலவர் வடமொழி பாரதத்தைத் தழுவி பாரத வெண்பா என்ற நூல் ஒன்றைத் தமிழில் இயற்றியுள்ளமை அறிகிறோம். ஆனால் இன்று அது முழுமையாக அன்றிச் சில பகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூர் ஆழ்வார் வேதவியாசருடைய வடமொழி மகாபாரதத்தைத் தமிழில் சுவை மிகுந்த இலக்கியமாக இயற்றியுள்ளார். இந்நூலில் 10 பருவங்களில் 4375 பாடல்கள் உள்ளன. கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் அட்டாவதானம் அரங்க நாதக் கவிராயர் விருத்தப்பாக்களில் வில்லிபாரதத்தை நிறைவு செய்து பாடி வைத்தார்.
கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நல்லாப்பிள்ளை எனும் புலவர் 7000க்கு மேற்பட்ட செய்யுள்களால் விரிவான பாரதத்தைத் தமிழில் எழுதித் தந்தார். மகாபாரதக் கிளைக் கதைகள் பல. அவற்றுள் நளனைப் பற்றிய வரலாற்றைக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் நளவெண்பா என்ற பெயரில் புகழேந்திப் புலவர் பாடினார். கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேவராசப்பிள்ளை என்பவர் குசேலோபாக்கியானம் என்னும் நூலையும், பாரதியார் பாஞ்சாலி சபதம் என்ற தழுவல் காப்பியத்தையும் தமிழில் தந்துள்ளனர்.
4.4.3 பகவத்கீதை மொழிபெயர்ப்பு
அடுத்தபடியாக, பகவத்கீதை மொழிபெயர்ப்பும் தமிழில் வழிவழிச் சிறப்புப் பெறுகிறது. வடமொழி மகாபாரதத்தில் போரின் பொழுதுதான் உறவினர்களைக் கண்டு தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, அறிவுறுத்தி, செயல்படத் தூண்டிய கண்ணனது அறிவுரைப்பகுதிதான் கீதை. ஸ்ரீமத் பகவத்கீதை என வடமொழியில் கூறப்படும் நூல்தான் இது. இசையோடு பாடப்படும் தன்மை உடையதாக அமைந்துள்ளது.
பகவானால் அருளப்பட்ட திருநூல் என்பதைவிடப் புனித இசைப் பாடல்களைக் கொண்ட இசைத் திருநூல் (Song celestial) என்ற பொருளிலேயே இந்நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது என்றும், இது தமிழில் 12 மொழிபெயர்ப்புகளையும், ஆங்கிலத்தில் 27 மொழிபெயர்ப்புகளையும் கொண்டு விளங்குகிறது என்றும் டாக்டர் க.த. திருநாவுக்கரசு அவர்கள் கருத்தளித்துள்ளார். திருமதி. மு. வளர்மதி அவர்களின் மொழிபெயர்ப்புக்கலை என்ற நூலின் 74-76 என்ற பக்கங்களில் அவர் அளித்துள்ள பட்டியலின் வாயிலாகக் காண்கின்ற பொழுது கீதையின் 14 மொழிபெயர்ப்புகள் பல்வேறு காலங்களில் தமிழில் வெளியிடப் பட்டுள்ளமையை நம்மால் அறிய முடிகிறது.

link 

No comments:

Post a Comment