Tuesday 15 November 2011

நடனம் ஆடினால் சர்க்கரை நோயும் ஓடிப்போகும்

இன்றைய உலக மனிதர்கள் உடல் ரீதியாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை… சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய். ஒருபுறம் உலக அளவில் இந்த நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க, மறுபுறம் இந்தியாவில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயர்ந்து வருகிறது.

அந்த நோயால் பாதிக்கப்படுவோர் வாழ்நாள் முழுக்க அவதியை அனுபவிக்க நேரிடுகிறது. எப்படியும் வாழலாம் என்ற நிலையில் இருந்து வெளியேற்றப்பட்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற குறுகிய வாழ்க்கை வட்டத்திற்குள் தள்ளப்பட்டு விடு
கின்றனர்.

இதனால், இந்த நோயை தடுக்க ஆய்வாளர்களும் தங்களது பங்குக்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த ஆய்வில் சமீபத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடனம் ஆடினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்பதுதான் அது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா நர்சிங் கல்லூரி பேராசிரியர் டெரி லிப்மன் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். முதல்கட்ட ஆய்வில் வாரத்துக்கு 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நடனம் ஆட அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஒரு மாதம் வரை அவர்கள் இவ்வாறு நடனம் ஆடினர். இதில் அவர்களது நீரிழிவு நோய் பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது தெரிய வந்தது. அதோடு, அவர்களது உடல் எடையும் கணிசமாக குறைந்திருந்தது.

இதுகுறித்து பேராசிரியர் டெரி லிப்மன் கூறுகையில், “குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது. மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை மெல்லியதாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது” என்றார்.

நன்றி-தினத்தந்தி

No comments:

Post a Comment