Thursday, 31 July 2014

அதிர்ஷ்டம்!!!!!!!!!!!!

அவன் மிகவும் ஏழை.
தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது.
அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை.
அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான்.
அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான்.
அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான்.
வெளியே எடுக்கமாட்டான்.

சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான்.
அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள்.
உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன்.
காசு தெருவில் விழுந்துவிட்டது.
எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை.
நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்” என்றாள்.
”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான்.
”அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றாள்.
அவன் அமைதியாக சிந்தித்தான்.

No comments:

Post a Comment