Monday, 7 July 2014

பிரமாண்ட மால் முழு ஏசி நகரம் துபாய் அரசு முடிவு

துபாய்: உலகின் மிகப்பெரிய வணிக மையம், கேளிக்கை பூங்கா, ஹோட்டல், மருத்துவமனைகள், தியேட்டர்களை உள்ளடக்கிய முற்றிலும் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட நகரம் உருவாக்கப்படும் என துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அறிவித்துள்ளார். துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா 163 மாடிகளுடன் 828 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 37 மாடிகளுடன் 192 மீட்டர் உயரம் கொண்ட துபாய் மால் உலகின் முக்கிய வணிக வளாகங்களுள் ஒன்றாக உள்ளது. மேலும், நவீன தொழில் நுட்பத்துடன் காண்போர் வியக்கும் வகையில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உலகின் மிகப்பெரும் வணிக மையத்துடன் முழுவதும் குளிரூட்டப்பட்ட நகரம் அமைக்கப்படும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உலகின் மிகப்பெரிய கேளிக்கை பூங்காவை உள்ளடக்கிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட நகரத்தை நாங்கள் அமைக்க உள்ளோம். 7 கி.மீ நீளம் கொண்ட இந்த நகரத்தில், 44 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு வணிக வளாகங்கள் அமைக்கப்படும். அதன் மேல் பரப்பு கண்ணாடிகளால் அமைக்கப்படும். கோடை காலங்களில் அந்த நகரம் முற்றிலும் குளிரூட்டப்படும். குளிர்காலங்களில் கண்ணாடி திறந்து வைக்கப்படும். அனைத்து காலங்களிலும் பல்வேறு நாட்டு மக்களை ஈர்க்கும் சுற்றுலா தலமாக விளங்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

இதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதற்காகத்தான் நாங்கள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட நகரத்தை கோடை காலத்திற்காக அமைக்க உள்ளோம். மால் ஆஃப் த வேர்ல்டு என்ற பெயரில் நாங்கள் அமைக்க உள்ள வணிக வளாகத்திற்கு, ஆண்டுக்கு 18 கோடி பார்வையாளர்கள் வருவார்கள் என நம்புகிறோம்“ என்று குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரும் வர்த்தக கண்காட்சியை 2020ம் ஆண்டு துபாய் நடத்த உள்ளது.

No comments:

Post a Comment