# என்னென்ன கட்டண வகைகள் உள்ளன?
புதிய மின் இணைப்பு பெற பதிவு கட்டணம், இணைப்புக் கட்டணம், மீட்டர் பாதுகாப்பு காப்புத்தொகை, விரிவாக்கக் கட்டணம் மற்றும் காப்புத் தொகை வசூலிக்கப்படுகின்றன. இது தவிர மீட்டர் மாற்று கட்டணம், மீட்டர் பலகை மாற்று கட்டணம், துண்டிப்பு மற்றும் மறு இணைப்புக் கட்டணம், மீட்டர் மாற்ற, மீட்டர் பரிசோதனை ஆகிய கட்டணங்களும், மின் சுமை குறைப்பு மற்றும் அதிகரிப்புக் கட்டணங்கள், மின் பயன்பாட்டுக் கட்டணம், பெயர் மாற்றம், அபராதக் கட்டணம் போன்ற வகைகள் உள்ளன.
# கட்டணத்தை எப்படி செலுத்தலாம்?
மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகங்களில் பணம், காசோலை அல்லது வரைவோலையாக செலுத்தலாம். தேர்வு செய்யப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தபால் அலுவலகங்கள், சிட்டி வங்கி, கரூர் வைஸ்யா வங்கியின் மொபைல் போன் வங்கி சேவை ஆகியவை வழியாகவும், இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகவும், தானியங்கி மின் கட்டண இயந்திரம் மூலமாகவும் செலுத்தலாம். குறிப்பிட்ட சில செல்போன் சேவைகள் வழியே, மொபைல் போனிலும் செலுத்தலாம்.
# எத்தனை நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்?
தாழ்வழுத்த மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது. கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் அரசு விடுமுறையாக இருந்தால், அதற்கு அடுத்த நாள் கட்டிவிட வேண்டும்.
# மின் கட்டணம் செலுத்த கூடுதல் தொகை ஏதும் உண்டா?
மின்சார பிரிவு அலுவலகங்கள், தானியங்கி மின் கட்டண இயந்திரத்தில் கட்டுவதாக இருந்தால் கூடுதல் கட்டணம் இல்லை. ஆன்லைனில் கட்டும்போது கனரா, இந்தியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் ஒரு இணைப்புக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதல் கட்டணம் உண்டு. ஆன்லைன் ஆக்சிஸ், பரோடா, ஐசிஐசிஐ வங்கிகளில் 2 சதவீதத்துக்கு குறைவாக, மின் கட்டணத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கியில் போன் பேங்கிங்கில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கட்டணம் கிடையாது. தபால் அலுவலகங்களில் 1,000 ரூபாய்க்கு ரூ.5ம், 2,500 வரை ரூ.10ம், 5,000 வரை ரூ.15ம், 5,000க்கு அதிகமான தொகைக்கு ரூ.20ம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
# மின்னஞ்சல் முகவரி இல்லாமல் மின் கட்டணத்தை இணையதளத்தில் அறிய முடியுமா?
நிச்சயமாக முடியும். தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக இணையதளத்தில் கட்டண சேவைகள் என்ற வசதியில், கட்டண விவரம் என்ற ஆப்ஷனில் தங்களது மின் இணைப்பு மண்டலம் மற்றும் மின் இணைப்பு எண்ணைப் பதிவு செய்து, மின் கட்டண விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், மின் கட்டணம் செலுத்துவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக இணையதளத்தில் இமெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment