Monday, 17 June 2013

எதை விட்டுக் கொடுப்பது?

ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நிறைய சீடர்கள். இவர்கள் அனைவரும் பெரியவர் மீது அன்பைப் பொழிந்தனர். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர். பெரியவரது உலக வாழ்க்கை நிறைவு பெறும் நேரம் வந்தது. அவரைத் தேடி வந்த கடவுளின் தூதர், "ஐயா! உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்! என்றார். சீடர்கள் துடித்துப் போனார்கள்.

இன்னும் சிறிது காலம் அவரை இந்த உலகத்திலேயே இருக்க விடுங்களேன்! என்று கடவுளின் தூதரிடம் மன்றாடினர். இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டதே! என்றார் கடவுளின் தூதர். "வேறு வழி இல்லையா? என்று குரலில் சோகம் ததும்பக் கேட்டனர் சீடர்கள். ஒரே ஒரு வழிதான் உள்ளது! என்றார் தூதர். என்ன வழி? தயவு செய்து சொல்லுங்கள்! ஆர்வத்துடன் கேட்டனர் சீடர்கள்.

அவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய நீங்கள் முன்வர வேண்டும்! என்றார் தூதர். உடனே பெரியவருக்காக எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்! என்றனர் சீடர்கள். இதைக் கேட்ட தூதர், உயிர் வேண்டாம்,. உங்கள் வாழ்நாளில் ஆளுக்குக் கொஞ்சம் இவருக்குக் கொடுத்தால்... அதை இவரது ஆயுள் கணக்கில் வரவு வைத்து விடலாம்! என்றார்.

முதலில் ஒருவன் வந்தான். என் ஆயுளில் இரண்டு வருடத்தைத் தருகிறேன்! என்றான். இன்னொருவன், ஒரு வருடம் தருகிறேன்! என்றான். மூன்றாவதாக ஒருவன், ஒரு மாதம்! என்றான். எதையுமே செலவு செய்து பழக்கமில்லாத ஒருவன் எனது ஆயுளில் ஒரு நிமிட நேரத்தை இவருக்காகத் தருகிறேன்! என்றான்.

கடைசியாக வந்த ஒருவன் சொன்னான். இருபது வருடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! இதைக் கேட்ட கடவுளின் தூதருக்கு ஆச்சர்யம். இது ரொம்ப அதிகம் இல்லையா? என்று கேட்டார். உடனே அந்த ஆசாமி சொன்னான். ""நான் சொன்ன இருபது வருடங்கள் என் மனைவியின் வயதிலிருந்து!''

நண்பர்களே! உலகில் எதுவுமே உங்களுடையது இல்லை என்பதை உணருங்கள். அப்படி உணரும் போதுதான் நீங்கள் ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். "இது என்னுடையது' என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை. "எதுவும் என்னுடையது அல்ல!' என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!.
(தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதை )

No comments:

Post a Comment