Thursday, 9 May 2013

சூரிய ஒளியால் இயங்கும் விமானம்

அந்த விமானத்தின் பெயர் சோலார் இம்பல்ஸ். பெயரிலிருந்தே அது சூரிய ஒளியால் இயங்குவது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பொதுவில் விமானங்கள் அவற்றில் அமைந்த எஞ்சின்களைப் பொருத்து விசேஷ பெட்ரோல் அல்லது உயர் ரக கெரசினை எரிபொருளாகப் பயன்படுத்தும். சோலார் இம்பல்ஸ் விமானத்துக்கு இப்படியான எரிபொருள் தேவையில்லை. இந்த விமானம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றிக் கொள்கிற்து. அந்த மின்சாரம் விமானத்தை இயக்கப் பயன்படுத்தப்படுகிற்து.
முற்றிலும் சூரிய ஒளியால் இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானம்
இதை சற்று விளக்கியாக வேண்டும். முன்புறம் சுழலிகள் (புரொப்பல்லர்கள்) பொருத்தப்பட்ட விமானத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.இந்த் சுழலிகள் சுழன்றால்  தான் விமானம் பறக்கும். அதற்குத் தான் விசேஷ பெட்ரோல்.

சோலார் இம்பல்ஸ் விமானத்தில்  நான்கு மின்சார பேட்டரிகள் இருக்கும். இவை இறக்கைகளின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன். சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் இவற்றில் சேமிக்கப்படும்.விமானத்தின் புரொப்பல்லர்களை இயக்க இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும்.இந்த விமானத்தை மின்சார விமானம் என்று அழைத்தாலும் தப்பில்லை. அந்த அளவில் இது மின்சார கார் மாதிரி என்றும் சொல்லலாம்.

விமானத்தின் புரொப்பல்லர்கள் இயங்க நிறைய மின்சாரம் வேண்டுமே. ஆகவேதான் சோலார் இம்ப்ல்ஸ் விமானத்தின் இறக்கைக்களின் மேற்புறம் மீது சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற சுமார் 12,000 சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன்.
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பிய போது...
இவ்வளவு மின்சார செல்களைப் பொருத்த நிறைய இடம் தேவை என்பதால் தான் இந்த விமானத்தின் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன். இடது புற இறக்கையின் நுனியிலிருந்து வலது புற இறக்கையின் நுனி வரை இறக்கைகளின் நீளம் 63 மீட்டர். ( சுமார் 208 அடி).  விமானத்தின் பின்புறத்திலும் மேல் பகுதியில் சோலார் செல்கள் உண்டு.

தரையில் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் போது மேலிருந்து பார்த்தால் ஏதோ குச்சிப் பூச்சி உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றும்.

இந்த விமானம் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளும் என்றாலும் இதன் எடை ஒரு காரின் எடைக்குச் சமம்.அவ்வள்வுதான்.

 பல புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பெருஞ்செலவில் பரீட்சார்த்த அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் அதை இயக்கும் பைலட் ஒருவர் தான் ஏறிச் செல்ல முடியும்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ராண்ட் பிக்கார்ட், ஆண்டோ போர்ஷ்பெர்க் ஆகிய இருவரில் ஒருவர் தான் இதை வானில் ஓட்டிச் செல்வார், இரவானாலும் சரி, பகலானாலும் சரி இந்த விமானம் தொடர்ந்து 26 மணி நேரம் பறக்கத்தக்கது.

சோலார் இம்பல்ஸ் விமானம் இந்த மாதம் மூன்றாம் தேதி காலை சுமார் 6 மணி அளவில் அமெரிக்காவின் மேற்குக் கரையோரமாக உள்ள  சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து கிழக்குக் கரையில் உள்ள நியூயார்க் நகரை நோக்கிக்  கிளம்பியது. வழியில் பீனிக்ஸ், டல்லஸ், செயிண்ட் லூயி, வாஷிங் டன்,DC ஆகிய நகரங்களில் இறங்கி அங்கு தங்கி விட்டு ஜூலை மாத வாக்கில் நியூயார்க் நகருக்குப் போய்ச் சேரும்.
,வானில் கிளம்புவதற்கு ஆயத்த நிலையில் சோலார் இம்பல்ஸ்
இத்துடன் ஒப்பிட்டால் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பி வழியில் எங்கும் இறங்காமல் பல நூறு பயணிகளை ஏற்றிச் செல்கின்ற விமானங்கள் சுமார் ஆறரை மணி நேரத்தில் ( சுமார் 4000 கிலோ மீட்டர் தூரம்)  நியூயார்க் போய் சேருகின்றன.

சோலார் இம்பல்ஸ் விமானம் சுமார் மூன்று மாத காலம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம் உண்டு. அது மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாகும்.( மற்ற விமானங்கள் மணிக்கு சுமார் 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்பவை). மெதுவாகப் பறக்கிறது என்பதால் சோலார் இம்பல்ஸ் முதல் கட்டமாக பீனிக்ஸ் நகருக்கு வந்து சேரவே 19 மணி நேரம் பிடித்தது.

சோலார் இம்பல்ஸ் விமானத்தை ஓட்டிச் செல்பவர் தனியொருவராகப் பயணிக்கிறார்.விமானத்தைத் தக்கபடி கட்டுப்படுத்தி ஓட்டுவதற்கு மிகுந்த கவனமும் மனப் பக்குவமும் தேவை. எனவே தான் பிக்காரடும், போர்ஷ்பெர்க்கும் யோகாசனமும் ப்யின்றுள்ளனர்.

 பகலில் நல்ல வெயில் அடிக்கிற நேரத்தில் இந்த விமானம் சுமார் 9000 மீட்டர் உயரத்தில் பறக்கும். மாலை நேரம் வந்ததும் 1500 மீட்டர் உயரத்தில் பறக்கத் தொடங்கும்.

பொதுவில் விமானங்கள் உறுதியான அலுமினிய கலப்பு உலோகத் தகடுகளால் உருவாக்கப்படும். இதற்கு மாறாக சோலார் இம்பல்ஸ் விமானம் உலோகமல்லாத பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ நார்ப் பொருளுடன் பிசினைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மிக மெல்லிய் ஷீட்டுகளை  கொண்டு இந்த விமானத்தின் உடல் பகுதியும் இறக்கைகளும் உருவாக்கப்பட்டன.

 நீண்ட இறக்கைகள் மீது சோலார் செல்கள் பதிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்
இந்த விமானம் 2009 ல் கட்டி முடிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் முதல் தடவையாகப் பறந்தது. பின்னர் பரிசோதனையாக ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டுக்குப் ப்றந்தது.  இப்போது அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்குப் பறப்பதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இப்போதைய மாடல் HB- SIA  என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் சில புதிய அம்சங்களுடன் அடுத்த மாடல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டில் இப்புதிய மாடல் விமானம் உலகைச் சுற்றி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியால் இயங்கும் விமானத்தை உருவாக்கியதன் பிரதான நோக்கம் காற்று மண்டலத்தைக் கெடுக்காத தொழில் நுட்பத்தின் மீது அரசுகளும் தனியார் துறையினரும் அக்கறை காட்டும்படி செய்வதேயாகும் என்று இந்த விமானத்தை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

விமானத்தை ஓட்டுகின்ற ஒரே ஒருவர் மட்டும் ஏறிச் செல்லும் வகையிலான ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கும் அவர்களிடம் பதில் உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் லிண்ட்பெர்க் 1927 ஆம் ஆண்டில் நியூயார்க்கிலிருந்து பாரிஸ் நகருக்கு அவர் ஒருவர் மட்டுமே ஏறிச் செல்கிற விமானத்தை ஓட்டிச் சென்று சாதனை படைத்தார். ஆனால் அதற்கு 25 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா- ஐரோப்பா இடையே  200 பேர் செல்கின்ற விமானப் பயணம் சாத்தியமாகியது.சூரிய ஒளியால் இயங்கும் இப்போதைய விமானத்தை அந்த அளவில் தான் பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment