பாரதப்போரின் உச்சக்கட்டம்...கர்ணனுடன் அர்ஜுனன் விற்போர் செய்தான். ஆனால், கர்ணனின் ஆக்ரோஷத்துக்கு முன்னால், அர்ஜுனனின் காண்டீப சாகசங்கள் எடுபடவில்லை. பாசறைக்கு திரும்பிய அவனை தர்மர் அழைத்தார். போர் செய்யும் லட்சணமா இது! உனது காண்டீபத்தை (வில்) உலகப்புகழ் பெற்றது என்றும், நீயே வில்வித்தையில் சிறந்தவன் என்றும், நீ வைத்த குறி தப்பாது என்றும் ஆன்றோர்கள் சொல்வதாக பெருமையடித்துக் கொண்டாய். இப்போது என்னாயிற்று உன் காண்டீபத்தின் வல்லமை, என இகழ்ச்சியாகப் பேசினார் தர்மர்.
அண்ணன் தர்மர் சொன்ன வார்த்தைகள் தம்பி அர்ஜுனனின் மனதை உறுத்தியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் காண்டீபத்தை யாராவது கேலி செய்தால், அவர்களைக் கொன்று விடுவதாக சபதம் செய்திருந்தான் அர்ஜுனன்.
எனவே, அண்ணன் என்றும் பாராமல், அவரை நோக்கி வில்லை உயர்த்தினான். கண்ண பிரான் ஓடிவந்து தடுத்தார். அவரிடம், தனது சபதத்தை விளக்கினான் அர்ஜுனன். கண்ணன் ஒரு யோசனை சொன்னார்.
அர்ஜுனா! ஒருவரைக் கொலை செய்து தான் அவரது உயிர் போக வேண்டும் என்பதில்லை. அவர் மீது வீணான பழி போட்டாலே கொலை செய்ததற்கு சமம். எனவே, தர்மர் மீது ஏதாவது பழிபோடு, என்றார். அர்ஜுனனும் ஏதோ ஒரு பழியைப் போட்டு சபதத்தை நிறைவேற்றினான்.
பின்னர், தன் அண்ணனைக் கொன்றதற்கு சமமான பாவத்தை செய்துவிட்டோமே என மனம் வருந்தி தற்கொலைக்கு முயன்றான். அப்போதும் கண்ணன் தடுத்தார்.
அர்ஜுனா! இதென்ன விபரீதம்! சாஸ்திரத்தில் இதற்கும் பரிகாரம் உண்டு. உன்னை நீயே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம். நீ உன்னைப் பற்றி ஜம்பமாக பிறரிடம் ஏதாவது பேசு, என்றார். பிறர் மீது பழிபோடுவது, கொலைக்கும், உன்னை நீயே புகழ்வது தற்கொலைக்கும் ஈடானது...
No comments:
Post a Comment