Wednesday, 16 November 2011

பணம்

பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றைப் எளிதாகப் பரிமாறிக்கொள்ள, ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு. சேமிப்புக்கும் இது பயன்படும் அலகு. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெறுமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
தொடக்க காலத்தில் கொடுக்கல்-வாங்கல் தொழிலானது(வணிகமானது) பண்டமாற்று முறையில் நடைபெற்றது. இம்முறையின் கீழ் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெறுமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் சம்பளமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.)
தொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாறப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் சேமிப்புப் பெறுமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர்கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது.

பணத்தின் வகைகள்

முதலில், பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற மாழையின் (உலோகத்தின்) மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயத்துக்கு அதில் உள்ள தங்கத்தின் எடையின் பெறுமதி வழங்கப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் ஒரு நீட்சியாகக் கொள்ளலாம். தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதற்கடுத்த முறை கடன் பணம் எனப்படுவதாகும். இதன் கீழ், தங்கத்தை அல்லது ஏனைய பெறுமதியான உலோகங்களை உருக்கி, அவற்றை நாணயமாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, அரசு தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது, இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய தங்கம் அளிக்கப்படும் என அறிவித்துத்) தாள்களை வெளியிட்டது.
தாளை வாங்கிக் கொண்டு மாழையைத் (உலோகத்தைத்) தரும் உறுதிமொழி எதுவும் இல்லாமல் இந்த நாணயத்தாளின் மதிப்பைக் குறித்து, அரசின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாகப் பயன்படுத்தும் முறைக்கு பணம் எனப்படும். தற்போது பயன்பாட்டிலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள மாழையின் (உலோகத்தின்) மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.

No comments:

Post a Comment