இலங்கை (ஆங்கிலம்:Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, ஸ்ரீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka) ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் Ceylon (சிலோன்) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இந்நாடு கடந்த ஐந்து தசாப்தங்களாக இன முரண்பாடுகளுக்குள் சிக்கித் திணறிக் கொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக அரசாங்கத்துக்கும், தொடக்கத்தில் பல தமிழ் போராளிக் குழுக்களுக்கும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்பியுள்ளது. நோர்வேயின் அனுசரணையோடு 2002 இன் முற்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானது . இது அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய போதும், பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது[6][7]. போர் மீண்டும் தொடங்கியது.
கொழும்பு குடியேற்றவாத ஆட்சிக்காலம் முதலே இலங்கையின் தலைநகராக இருந்துவருகிறது. 1977 ஆம் ஆண்டில், இலங்கையின் நிர்வாகத் தலைநகராக அண்மையிலுள்ள கோட்டையை ஆக்கும் பொருட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடம் அங்கே கட்டப்பட்டது. இலங்கையின் ஏனைய முக்கிய நகரங்களில் யாழ்ப்பாணம், காலி, கண்டி, நுவரேலியா, திருகோணமலை, மட்டக்களப்பு என்பவை அடங்கும். இலங்கையில் போர் காரணமாக ஏற்பட்ட மக்கள் இடப் பெயர்வினால் மிக வேகமாக முன்னேற்றமடைந்த ஒரு நகரம் வவுனியா ஆகும்.
வரலாறு
புராதன காலம்
இலங்கை சிறிய தீவாக இருந்தபோதிலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் தொடங்குகின்றது. அதே மகாவம்சம் நூலின் படி 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழ் மன்னர்களும் சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆட்சி புரிந்தமைக்கான சான்றுகள் உள்ளன. சான்றாக 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னனான எல்லாளன் மன்னனுடன் சிங்கள மன்னனான துட்டைகைமுனு போரிட்ட வரலாறு உள்ளது. அத்துடன் துட்டைகைமுனு எல்லாளனுடன் போரிடுவதற்கு முன்பு 32 குறுநில மன்னர்களை வென்றதாகவும் மகாவம்சம் கூறுகிறது. அந்தவகையில் தமிழ் மன்னர்கள் இலங்கையின் தெற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆட்சிப் புரிந்துள்ளனர். எல்லாளனுடனான போரின் பின்னரும் தமிழ் மன்னர்கள் இருந்ததற்கான சான்றுகளும் மகாவம்சத்தில் உள்ளன. எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.
தொடக்கத்தில் இந்துக்களாக இருந்த இவர்களிடையே மகிந்த தேரரால் கிமு 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம் (அரசு கிமு 200 இலிருந்து கிபி 1000 வரை), பொலன்னறுவை (அரசு கிபி 1070 இலிருந்து கிபி 1200 வரை), ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன. பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின. இலங்கையின் வடபகுதியின் பண்டைய வரலாறு பற்றி இலங்கை வரலாற்று நூல்களில் அதிக தகவல்கள் இல்லை. எனினும் 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன. யாழ்ப்பாண இராச்சியம் என்று வழங்கப்பட்ட இவ்வரசு ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்ட வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது.
[தொகு] மத்திய காலம்
போர்த்துக்கீச கலபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா தலைமையில் 1505யில் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து பின்னர் கொழும்பு கரையை அடைந்தது. அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்த போர்த்துக்கீசர், பின்னர் அரசியல் உட்பூசல்களை பயன் படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர். 1580 போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான். பின்னர் 1597 கோட்டே மன்னன் இறக்க இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீசர் வசப்பட்டது. கண்டி இராசதானியுடன் 1638 இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர். 1796 இல் ஒல்லாந்தர் ஆங்கிலேய கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் தரிக்க இடமளிக்காததால் ஆங்கிலேயர் முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கை கரையோர பகுதிகளையும் கைப்பற்றினர். ஒல்லாந்தர் 1801 இல் பிரித்தானியருடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையைக் கொடுத்தனர். ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்கள பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையை பயன்படுத்தி அதுவரை இலங்கையின் நடுப் பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது தனியரசாக இருந்து வந்த கண்டி இராசதானியையும் 1815 யில் தமது சூழ்ச்சியால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.
[தொகு] நவீன காலம்
ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர், பெப்ரவரி 4, 1948இல் இலங்கை விடுதலை பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமுக நிலையில் இருந்துவந்த, தமிழ், சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாகச் சீர்கெடத் துவங்கின. இன முரண்பாடுகளின் வெளிப்பாடுகள், அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் காணப்பட்டன. ஐரோப்பிய குடியேற்றவாத காலங்களிலும், அதற்கு முன்னரும், சிங்கள சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்வதாகக் கூறிக்கொண்டு சிங்கள அரசியல்வாதிகளும், இனப்பாகுபாடு, இன ஒழிப்பு போன்ற குற்றச்சாட்டுகளுடன் தமிழ் அரசியல் வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு காழ்ப்புணர்வுகளை வளர்த்துக்கொண்டிருந்தார்கள். 1958ல் ஆரம்பித்து, இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழத்தொடங்கின. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, சிங்களம் மட்டும் சட்டமும், 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடியரசு அரசியல் யாப்பும், பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையும், நிலைமையை மேலும் மோசமாக்கின. 1983க்குப் பின்னர், கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் ஆயுதமேந்திய உள்நாட்டுப்போரினால், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தோ, படுகாயமடைந்தோ, அகதிகளாகியோ, சொத்துக்களை இழந்தோ பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
1987ஆம் ஆண்டில், இந்த உள்நாட்டுப் போருக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தமொன்றின்படி இந்தியா அமைதிகாக்கும் படையொன்றை (IPKF) இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பியது. முரண்பாடுகளில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளில் ஒன்றான தமிழர் தரப்பை நேரடியாகச் சம்பந்தப்படுத்தாத இந்த ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையில் ஏற்பட்ட போருடன், தோல்வியில் முடிந்தது. 2001 ஆம் ஆண்டில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நோர்வே முன் வந்ததையடுத்து, அந்நாட்டின் அனுசரணையுடன், போர்நிறுத்த ஒப்பந்தமொன்று நடைமுறைக்கு வந்ததுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. சில காரணங்களால், பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், போர் நிறுத்தமும், சமாதான முயற்சிகளும் 2007 ஆம் ஆண்டு வரையில் இலங்கை அரசு தன்னிச்சையாக விலகும் வரையில் நடைமுறையில் இருந்து வந்தன.
[தொகு] அரசியல்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் அரசியல்
குடியரசின் சனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக, 6 ஆண்டுப் பதவிக்காலத்துக்கு மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்படுகிறார். இவர் ஒரே நேரத்தில் நாட்டின் தலைவராகவும், அரசின் தலைவராகவும், ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும் செயல்படுகிறார். சனாதிபதி அரசியல் யாப்பினதும், ஏனைய சட்டங்களினதும் அமைவாக, தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராவார். சனாதிபதி, பாராளுமன்றத்துக்குப் பொறுப்புள்ள அமைச்சரவை ஒன்றை நியமித்து, அதற்குத் தலைமை தாங்குவார். குடியரசுத் தலைவர் அடுத்த நிலையிலுள்ளவர் பிரதம மந்திரியாவார்.
சனாதிபதியை பதவி நீக்கம் செய்வதாயின், அதற்கு பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 2/3 பெரும்பான்மைக்கு குறையாதோர் சனாதிபதி புரிந்த குற்றங்களையுடைய குற்றப்பிரேரணை ஒன்றை கையொப்பமிட்டு நிறைவேற்றுதல் வேண்டும். இந்த குற்றப்பிரேரணை உயர் நீதிமன்றம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டு அதனால் பரிசீலனை செய்யப்பட்டு, அங்கீகரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும். பின்னர் உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கபட்ட குற்றப்பிரேரணை மீண்டும் பாராளுமன்றம் முன்னர் கொண்டுவரப்பட்டு, அதன் மொத்த உறுப்பினர்களில் 2/3 குறையாதோர் வாக்களித்து நிறைவேற்றுதல் வேண்டும்.
இலங்கை பாராளுமன்றம் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபைகொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்டவாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கப்படுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.
பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ கூடிய அதிகாரமும், பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும், சனாதிபதிக்கு உண்டு. சட்டங்களை ஆக்குகின்ற அதிகாரம் பாராளுமன்றத்துக்கும், சர்வசன வாக்கெடுப்பொன்றின் மூலம் சனாதிபதிக்கும் உண்டு. இலங்கை, பொதுநலவாய நாடுகளின் ( Commonwealth countries ) உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
[தொகு] நிர்வாக கட்டமைப்பு
[தொகு] நிர்வாக சேவை
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் நிர்வாக சேவை
இலங்கையின் நிர்வாக சேவை இரு சமாந்தர கட்டமைப்புகளை கொண்டது. அவையாவன அரசாங்க சேவை (குடியேற்ற காலத்திலிருந்து வருவது), மாகாண சேவைகள் (1987இல் அமைக்கப்பட்ட மாகாண சபைகளினால் உண்டாக்கப்பட்டது) ஆகும்.
இலங்கை அரசாங்க சேவையானது பொதுச்சேவை ஆணைக்குழுவின் கீழும், மாகாண சேவைகளானது மாகாண சேவைகள் ஆணைக்குழுவின் கீழும் இயங்குகின்றன.
பிறநாட்டு வழமைகளுக்கு மாறாக இலங்கையின் நிர்வாக சேவைகள் நேரடி அரச கட்டுப்பாட்டில் உள்ளன. இது சில அரசியல் துட்பிரயோகங்களுக்கு வழிவகுத்த போதிலும், அனேகமாக வீண்விரயமற்ற, வேகமான நிர்வாக சேவையை ஏற்படுத்தியதாக கொள்ளப்படுகின்றது.