இணையம் வந்த பிறகு மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்துள்ளது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கும் போது ஒரு வகையில் பலருக்கு பயனைக் கொடுத்தாலும் இன்னும் சிலருக்கு இது வினையாக முடிந்து இருக்கிறது. இவ்வளவு நாள் சில விசயங்களில் கொள்ளை அடித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்த கைத்தொலைபேசி நிறுவனங்களுக்கு தலைவலியாகி வருகிறது Whatsapp, Viber போன்ற கைத் தொலைபேசி செயலிகள் (Apps). இது பற்றி பார்ப்போம். Image Credit – www.gamerheadlines.com
முன்பு Whatsapp நிறுவனம், வளர்ந்த நாடுகளில் பிரபலமாக இருந்தது பின் இந்தியாவிலும் பிரபலமாகத் தொடங்கியது. பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனம் 16+3 பில்லியனுக்கு Whatsapp ஐ விலைக்கு வாங்கியதும் இதன் பயன்பாடு உச்சத்தை அடைந்து விட்டது. தற்போது Whatsapp என்ற பெயரை அடிக்கடி நீங்கள் கேட்க நேர்வதே இதன் பிரபலத்திற்கு சாட்சி. வளர்ந்த நாடுகளில் பிரபலமான போதே Whatsapp பயன்பாட்டால் இங்கிலாந்து கைப்பேசி நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் நட்டம் ஆனதாகக் கூறப்பட்டது. தற்போது எவ்வளோ நட்டம் ஆகிறது என்பதை யோசிக்க மறந்து இதில் இனி லாபம் கிடைக்குமா! என்று நினைக்கத் துவங்கி இருப்பார்கள்.
நான் கடந்த ஒரு இடுகையில் இனி நம்ம ஊரிலும் (தங்கள் கைத் தொலைபேசி நிறுவனத்தின்) குறுந்தகவல் அனுப்புவர்கள் குறைந்து விடுவார்கள், அனைவரும் Whatsapp போன்ற செயலிகளையே பயன்படுத்துவார்கள் என்று கூறி இருந்தேன் ஆனால், இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது TRAI தலையிட வேண்டிய அளவிற்கு வந்து விட்டது. எனக்கு மாதம் 900 குறுந்தகவல்கள் இலவசமாக அனுப்ப முடியும் ஆனால், நான் அதிகபட்சமாக 10 தான் பயன்படுத்துகிறேன். மீதி முழுவதும் Whatsapp தான். இனி நம் ஊரிலும் Whatsapp அல்லது இது போன்ற செயலிகளே ஆட்சி செய்யப் போகிறது.
இரண்டு வருடம் முன்பு பலபயன் தொலைபேசி (ஸ்மார்ட் ஃபோன்) இந்த அளவிற்கு அனைவரும் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தோமா! வசதி உள்ளவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தி வந்தார்கள் தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. இப்ப யாரைப் பார்த்தாலும் தொலைபேசியில் டொக் டொக்குன்னு தட்டிட்டு இருக்காங்க! எனவே பலர் இவற்றைப் பயன்படுத்துவதால் இது தொடர்புடைய செயலிகளின் பயன்பாடும் அதிகரித்து விட்டது. இதுவே Whatsapp போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் அதிகரிக்கக் காரணம். ஒரு காலத்தில் Whatsapp என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன். “Whatsapp இல்லையா!” என்று இரண்டு வருடம் முன்பு என்னிடம் ஆச்சர்யமாகக் கேட்ட சக ஊழியரின் நினைவு வருகிறது. Whatsapp துவங்கப்பட்ட ஆண்டு 2009 நம்மிடையே பிரலமான ஆண்டு 2014.
தற்போது பண்டிகைக் காலங்களில் குறுந்தகவல் அனுப்பினால் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் நம்ம ஆளுங்க முந்தைய நாளே வாழ்த்து!! செய்தி அனுப்பினார்கள் இதனால், நிறுவனங்களும் பண்டிகை நாளும் அதற்கு முந்தைய நாளும் இரட்டிப்புக் கட்டணம் என்று வசூலித்தார்கள். பண்டிகைக் காலங்களில் எதற்கு இவர்கள் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்க வேண்டும்? இது திருட்டுத்தனம் தானே! இனியெல்லாம் பண்டிகை நாட்களில் இலவசமாக கொடுத்தால் கூட யாரும் பயன்படுத்த மாட்டார்கள். எல்லோரும் இனி Whatsapp போன்ற செயலிகள் தான். தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது பார்த்தீர்களா?!
இதனால் கைப்பேசி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இதே பரவாயில்லை எனும் நிலை தான் இனி வரப் போகிறது. ஏனென்றால் இன்னும் 2 வருடங்களில் அதிகபட்சம் நான்கு வருடங்களில் (இதே அதிகம்) பெரும்பாலனவர்கள் அழைப்பதற்கும் இணையத்தையே பயன்படுத்தப் போகிறார்கள். தற்போது எப்படி உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் குறுந்தகவல்கள் பயன்படுத்த அவசியமில்லாமல் இருக்கிறதோ அது போல 100 – 200 நிமிட இலவச அழைப்புகள் கூட குறுந்தகவல் போல பயன்படுத்த அவசியமில்லாமல் இருக்கும். இதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.
தற்போது குறுந்தகவலுக்கு Whatsapp போல, அழைப்புகளுக்கு பலர் Viber பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கும் இணையம் இருந்தால் போதும், உலகம் முழுக்க எவருடனும் இலவசமாகப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் நீங்கள் கைப்பேசிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வது குறைக்கப்படும். உதாரணத்திற்கு நான் சமீபமாக என் வீட்டில் உள்ளவர்களுடன் பேச Viber பயன்படுத்துகிறேன். முன்பு (சிங்கப்பூரில் இருந்து பேச) மாதம் 2000 ருபாய் செலவாகிறது என்றால் தற்போது 500 தான் ஆகிறது. ஊரில் உள்ள வீட்டு கைப்பேசிக்கு 200 ரூபாய்க்கு இணைய வசதி கொடுத்தால் 1 GB கொடுப்பார்கள், இது போதுமானது. எனக்கு ஏற்கனவே 3 GB கொடுக்கிறார்கள். இதற்கு கைத்தொலைபேசி இணையம் தான் வேண்டும் என்பதில்லை, உங்கள் வீட்டில் இணையம் இருந்து அதில் Wifi வசதி இருந்தால் கூட போதும். தற்போது Viber வசதி இல்லாதவர்களுடன் பேச மட்டுமே எனக்கு செலவாகிறது.
தற்போது கைப்பேசி இணையம் நம் ஊரில் அந்த அளவிற்கு வேகம் இல்லை ஆனால், மோசமில்லை. இன்னும் சில வருடங்களில் நிச்சயம் வேகம் அதிகரிக்கும், அதிகரித்தே ஆக வேண்டும். அப்போது யாரும் பணம் கொடுத்து அழைக்காமல், Viber போன்ற வசதிகளையே பயன்படுத்துவார்கள். Whatsapp இந்த ஆண்டு இறுதியில் குறுந்தகவல் வசதியோடு Viber போல அழைக்கும் வசதியையும் கொண்டு வரப்போவதாகக் கூறி இருக்கிறது. இதன் பிறகு கடும் போட்டியாகி விடும்.
இந்தப் பிரச்சனை நம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதை TRAI உணர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் நட்டத்தைத் தவிர்க்க Whatsapp, Viber போன்ற நிறுவனங்களுக்கு வேறு வகையில் கட்டணம் விதிப்பார்கள் அல்லது பயன்பாட்டில் விதிமுறைகளைப் புகுத்துவார்கள். இதன் மூலம் தற்போது போல செயலிகளை எளிமையாகப் பயன்படுத்தி விட முடியாத நிலை வரும். இணையக் கட்டணம் அதிகரிக்கலாம். வேறு வகையில் மறைமுகக் கட்டணங்களை விதிக்கலாம் ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கவே முடியாது. எவ்வளவு தடை போட்டாலும் வேறு வகையில் ஏதாவது ஒரு வசதி வந்து கொண்டே இருக்கும் என்பது தான் உண்மை.
தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள் அதன் வசதிகளைப் பாதுகாப்புடன் பயன்படுத்துங்கள். உலகில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. எந்த ஒரு இலவசத்தின் பின்பும் ஏதாவது ஒரு மறைமுகக் காரணம் / லாபங்கள் இருக்கும். எனவே இலவசம் என்பதற்காக கண்மூடித்தனமாகப் பயன்படுத்தாமல், எதைப் பயன்படுத்தினால் பாதுகாப்பு என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.
கொசுறு 1
நன்மை இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்குமா! தற்போது Whatsapp பிரபலம் அடைந்து வருவதால் பலரும் புது குழுக்களை உருவாக்கி மற்ற நண்பர்களை இணைத்து வருகிறார்கள். இது பெரும் தொல்லையாக உருவாகி வருகிறது. பலருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கிறது ஆனால், இதை தடுக்கவும் வழி இருக்கிறது. தற்போது Whatsapp ல் எத்தனை குறுந்தகவல் அனுப்பினாலும் கட்டணம் இல்லை என்பதால், சிலர் ஒரே குறுந்தகவலில் அனுப்பக்கூடிய செய்தியைக் கூட 4 குறுந்தகவல்களாக அனுப்புவார்கள். Alert நிறுத்தி வைக்கவில்லை என்றால் “டின் டின்” என்று குறுந்தகவல்கள் சத்தமாகக் கேட்டு கடுப்பேத்தும்.
சுருக்கமாக, சரியாகப் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம், தெரியாதவர்களுக்கு இவை தொல்லை. தொழில்நுட்பம் எப்போதுமே பல வசதிகளைக் கொடுத்து தொல்லைகளை தவிர்க்கவும் உதவுகிறது. எனவே இவற்றை முறையாகப் பயன்படுத்தினால் நமக்கு லாபமே!
கொசுறு 2
டெல்லி காவல் துறையினர், லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரிகளைப் பற்றி புகார் கொடுக்க Whatsapp முறையைக் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் லஞ்சம் கேட்பதைக் காணொளி எடுத்து இவர்கள் கொடுத்துள்ள கைத்தொலைபேசி எண்ணிற்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. நாம் புகார் கொடுக்க நேரடியாக யாரையும் அணுகத் தேவையில்லை எனும் போது இது எளிதாகி விடுகிறது. எவரும் லஞ்சம் வாங்குபவரை காணொளி எடுத்து அனுப்ப முடியும். ஒலிப் பதிவையும் அனுப்பலாம். இதில் கூறப்பட்டுள்ளது உண்மையா என்று உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சமூகத்தளங்கள் வந்ததில் இருந்து பலருக்கு குடைச்சல் ஆகி விட்டது. சென்னையில் ஒருவரிடம் குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறாரா என்ற சோதனையில் அநாகரீகமாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரியை காணொளி எடுத்து, அதை பாதிக்கப்பட்டவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். இது காட்டுத் தீயாகப் பரவி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும் இந்த Whatsapp முறையைக் கொண்டு வரலாம், நன்கு வரவேற்பு இருக்கும்.